அலமு என்ற பெயர் பொறித்த பாத்திரங்கள்
Volume 5 | Issue 12 [April 2026]

அலமு என்ற பெயர் பொறித்த பாத்திரங்கள்
சி.எஸ். லக்ஷ்மி

Volume 5 | Issue 12 [April 2026]

சாதாரணமாக உணவு பற்றிய நினைவுகள் சுவை, தாளிப்பின் மணம், பண்டிகைகள், பருவங்கள் இவற்றுடன் வரும் உணவு இவை குறித்த நினைவேக்கத்துடன் வரும்.  ஆனால் எப்போதும் அவற்றுடன் வருவது உணவு தயாரித்த அம்மாவோ பாட்டியோ குறித்த நினைவேக்கம் கூட.  “இந்தச் சாப்பாடு  எங்க அம்மா சமைப்பது போல இல்லை” என்பது எதார்த்த வாழ்க்கையிலும் கதைகளிலும்   கணவன்மார்களின் பொதுவான புகார். தமிழ்க் குடும்பங்களில் இதைக் “கை மணம்” என்போம். எல்லோருக்கும் இது லபிப்பதில்லை. இது இயற்கை தரும் வரம். என் உணவு பற்றிய நினைவுகள் இவை எல்லாம் பற்றி மட்டும் அல்ல. எல்லோராலும் அலமு என்று அழைக்கப்பட்ட   என் அம்மா அலமேலு உணவு என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு கையாண்டாள் என்பது பற்றியது கூட. உணவு என்பது சில முக்கியமான தினங்களில் சின்ன வெங்காயத்துடனும் மற்ற நாள்களில் முருங்கைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, சேப்பங்கிழங்கு இல்லையென்றால் வெறும் பருப்புருண்டை போட்டு தேங்காயும் இன்னும் சில அஞ்சறைப்பெட்டி சாமான்களும் சேர்த்து விழுதாக அரைத்துப்போட்டு, கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல் எண்ணெய்யில் தாளித்த (சாம்பாருக்குத் தாளிப்பு எப்போதும் நல்லெண்ணெய்யில்தான்)  ருசியான சாம்பார் செய்யும் சமையல் மட்டும் இல்லை. அல்லது பனிரெண்டுவகை ரசமோ நாங்கள் பெங்களூரில் இருந்ததால் பிஸிபேளே பாத்தும் கோசம்பரியுமோ சமைப்பது கூட இல்லை. உணவு எப்படி நிகழ்கிறது என்பது அம்மாவுக்கு முக்கியம்.

1926இல் தன் 11ஆம் வயதில் அம்மாவின் திருமணம் நடந்தது. புக்ககத்துக்கு வந்தபோது அவளுக்குப் பதினைந்து வயது. அவளுடைய பெற்றோர்கள் கொடுத்து அனுப்பிய  வீட்டுக்கான பல சாமான்களுடன் வந்தாள். அவற்றில்  “அலமு” என்ற அவள் பெயர் பொறித்த  பாத்திரங்களும் அடக்கம். ஒரு பெரிய குடும்பத்தில் மருமகள்கள் அவரவர் பாத்திரங்களில் தங்கள் பெயர்களை பொறித்து வைத்துக்கொள்வது எதிர்காலத்தில் வீண் சண்டைகளைக் கிளப்பாது. எங்கள் வீட்டில் இருந்த எல்லாப் பாத்திரங்களிலும் அம்மா பெயர் பொறித்திருந்தது. என் அப்பாவுக்குப் பதினாலு வயது ஆகும்போது விதவையான தன் மாமியாரிடமிருந்துதான் அம்மா சமைக்கக் கற்றுக்கொண்டாள். அந்தக்கால வழக்கத்தின்படி  மொட்டையடித்து, பழுப்பு வண்ணப் புடவையை மாமியாருக்குத் தந்துவிட்டிருந்தனர்.  ஆனால் அவருக்குக் காப்பாற்ற ஒரு குடும்பம் இருந்தது. மூத்த இரு மகன்களும் இஞ்சினியராகவும் வக்கீலாகவும் ஆக முயன்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டிருந்தது. ஆனால் என் அப்பாவையும் சேர்த்து இன்னும் படித்துக்கொண்டிருந்த மூன்று மகன்கள் அவருக்கு இருந்தார்கள். வீட்டில் மாடுகள் இருந்ததால் பால் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார் குடும்பத்தைக் காப்பாற்ற. இந்தச் சாமர்த்தியமான பெண்மணியிடமிருந்துதான் அம்மா சமைக்கக் கற்றுக்கொண்டாள். ஆகவே சமைப்பதுடன், எப்படிப்பட்ட விறகு வாங்க வேண்டும், வீட்டிலேயே கரி அடுப்பு எப்படிச் செய்வது, காப்பிக்கொட்டையை எப்படி வறுத்து எப்படி வேறு வகைக்  காப்பிக்கொட்டையைச் சேர்த்து காலையில் அருந்தும் பில்டர் காப்பிக்கான காப்பிப்பொடியை ஒவ்வோர் இரவும் பொடிப்பது இது எல்லாமும்  தெரிந்துகொள்ள முடிந்தது.

தகர வாளியில் சிமெண்ட்டைப் போட்டு அம்மா தானே கரி அடுப்பு செய்வாள். சின்னத் தகர வாளி ஒன்று வாங்கிவந்து, அதில் சிமெண்ட்டை அடைத்து, முன்பக்கம் கரி அடுப்பை ஏற்றுவதற்காக அரை வட்டத்தை வெட்டுவாள். சிமெண்ட் உலர்ந்ததும் வாளியை எடுத்துவிடுவாள்.  “அம்மா, அந்த முன் பக்க ஓட்டை எத்தனை பெரிசா இருக்கணும்னு எப்படித்  எப்படித் தீர்மானிப்பீங்க?” என்று அக்கா ஒரு முறை அம்மாவிடம் கேட்டாள். “ஒரு கை நுழைய இடம் இருக்கணும். அதுதான் அளவு” என்று சொன்னாள் அம்மா. வீட்டில் சாமான் அறையில் ஒரு காப்பி பொடிக்கும் இயந்திரம் அலமாரித்  தட்டில்  ஆணி அடித்து  வைக்கப்பட்டிருந்தது. அம்மா கவனமாக வறுத்து டின் ஒன்றில் வைத்திருந்த காப்பிக்கொட்டையை ஒவ்வோர் இரவும் அதில் போட்டு அதன் பிடியைச் சுற்றிவிட்டு காப்பி பொடிப்பது எங்களில் ஒருவர் வேலை. காப்பிப்பொடி கீழே உள்ள டபராவில்  விழும். அது காப்பிப்பொடி விழுந்து விழுந்து  அதன் நிறத்திலேயே  இருக்கும். டிகாக்‌ஷன் கீழே விழ காப்பி பில்டரின் தலையை இரும்பு இடுக்கியால் அம்மா தட்டும் ஒலி கேட்டதும் எழுந்திருக்கும் நேரமாகிவிட்டது என்று தெரிந்துவிடும் எங்களுக்கு.

குடிக்கும் தண்ணீரை விட்டுவைக்க எங்கள் வீட்டில் ஒரு செப்புக் குடம் இருந்தது. செங்கல் பொடியைப் போட்டுத்  தேங்காய் நாரால் கரகரவென்று தேய்க்கப்பட்டு எப்போதும் பளபளவென்று மின்னும் அது. அதன் வாயில் அம்மாவின் பெயர்  “அலமு” பொறிக்கப்பட்டிருந்தது. மரத்தால் ஆன மடக்கும் கொழுக்கட்டை அச்சு ஒன்றும் இருந்தது. அரிசி மாவைச் சிறிது எண்ணெய் விட்ட கொதிக்கும் வெந்நீரில் போட்டு மரக்கரண்டியால் கிளறிவிட்டு (அது தயிர் கடையும் மத்தின் பிடியாகத்தான் இருக்கும் பெரும்பாலும்) கொழுக்கட்டை மாவு கிளறியபின் அதை உருண்டை பிடித்து அதை ஆவியில் வேகவிட்டு எடுத்த பின்,  உள்ளே வைக்கப் பூரணங்களைத் தயாரித்ததும்—தேங்காய் வெல்லப் பூரணம், உளுத்தம்பருப்பை ஊறவைத்து, இஞ்சியும் பச்சை மிளகாயும் போட்டு அரைத்து, ஆவியில்  வேகவைத்து உசிலித்த     உசிலி, எள்ளுப் பூரணம்—கொழுக்கட்டை செய்யும் வேலை ஆரம்பமாகும். அலுமினியத்தில்   உள்பக்கம் கீழே நீளமாக  ஓட்டை போட்ட,  மரத்தால் ஆன கொழுக்கட்டை நாழியில் மாவு உருண்டைகளை வைத்து நாழியின் பிடியை அச்சின் மேல் அழுத்தியதும்  அது பாய் போல் அதன்மேல் விரியும். பூரணத்தை வைத்து  அச்சை மடக்கிவிட்டுப் பின்னால் தொங்கும் மாவைப் பிய்த்து எடுத்து  அச்சைத் திறந்தால்  மந்திரம் போல் உள்ளே மூன்று கொழுக்கட்டைகள் இருக்கும்! இரண்டு அச்சுகளில் ஒரு சமயத்தில் ஆறு கொழுக்கட்டைகள் செய்து,  அதன்பின் இட்லித் தட்டில் வேகவிட்டு எடுக்கப்படும். மூன்று வகைப் பூரணங்களுடன் நூறு கொழுக்கட்டைகளாவது செய்யப்படும். கணபதி எதிரே தட்டில் வைத்த கொழுக்கட்டைகளைப் பார்ப்பாரே ஒழிய அவற்றைக் கபளீகரம் செய்வது நாங்கள் நான்கு குழந்தைகள்தாம்!

அடியில் ஓட்டை போட்ட பித்தளை அச்சு வைக்கும்படி நடுவில் ஓட்டை போட்ட ஒரு மர ஸ்டூல் இருந்தது வீட்டில்.  அதில்தான் சேவை பிழிவோம். கொழுக்கட்டை மாதிரியே அரிசி மாவு உருண்டை செய்து அதைப் பித்தளை அச்சில் வைத்து மரப் பிடியால்  அழுத்தினால் கீழே பாத்திரத்தில் சுட சுட சேவை விழும். பிடியை அழுத்துவது சிலசமயம் கஷ்டமாக இருக்கும். இரும்புப் பூண் போட்ட உலக்கையை வைத்து அதை அழுத்த  அம்மா அப்பாவைக் கூப்பிடுவார் எப்போதும். உலக்கையை நீளவாக்கில் வைத்து இரு பக்கங்களிலும் பிடித்துக்கொண்டு அப்பா அழுத்துவார்.  பிறகு புளிச் சேவை, எலுமிச்சைச் சேவை, தேங்காய்ச் சேவை எல்லம செய்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை தாளித்துக்கொட்டி, முந்திரிப்பருப்பு வறுத்துப் போடப்படும் எல்லா வகைச் சேவை மேலும்.

குழந்தைகளாக இருந்தபோது நாங்கள் சாப்பிட்ட வெள்ளிக் கிண்ணமும் இருந்தது வீட்டில். நாங்கள் வளர்ந்தபின்  யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அது வெளியே வரும். சட சுட சோற்றை அதில் போட்டு, வீட்டில் காய்ச்சிய  நெய் விட்டுக்  குழைத்து,  சீரக மிளகு ரசத்தை வீட்டுப் பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் உடம்பு சரியில்லாத குழந்தைக்காக அது எடுத்து வரப்படும். சாப்பிடுவதற்கு முரண்டு பிடிக்கும் குழந்தைக்கு அம்மா ஊட்டிவிடுவாள். அப்புறம் நீலாம்பரியில் தாலாட்டுப் பாடி தூங்கவும் வைப்பாள்.

இதைப் பெயர் பொறித்த பாத்திரங்கள்பற்றிக் கூறி எழுத ஆரம்பித்தேன். அந்த நாள்களில் பெங்களூரில், மதிய வேளைகளில் “ஸ்டீல் பாத்திரம் பேர் போடறது…”  என்று கத்திக்கொண்டே தெருவில் போவார்கள். இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் கைவினைஞர்கள். நாம் சொல்லும் பெயர்களைப் பாத்திரங்களிலும் தட்டுகளிலும் பொறித்துத் தருவார்கள். பெயர்களைப் பொறிப்பதோடு அதில் மயில், வேறு பறவைகள், மலர்கள் இவற்றையும் அலங்காரமாகப் பொறிப்பார்கள். என்னிடம் இருக்கும் அம்மாவின் பாத்திரங்களில் எல்லாம் அவள் பெயர் இருக்கிறது. அவை இருபதுகளில் பொறித்தவை. அவள் வாங்கிய புதுப் பாத்திரங்களில் பெயர் பொறித்தது  போதிய வேலை இல்லாமல் அலைந்த இந்த நாடோடிக் கைவினைஞர்கள்தாம். கலையழகுடன் அவர்கள் பெயர் பொறித்ததுடன் ஒப்பிடும்போது இப்போது கடைகளில் மின்சாரத்தால் இயங்கும் கருவியால் பெயர் பொறிப்பது ஒன்றுமே இல்லை. ராஜேஸ்வரி என்று என் அக்காவின் பெயரின் கீழ் சிறிய பறவை  பொறித்த சிறிய அண்டா என்னிடம் இருக்கிறது. ஆனால் அது மங்க ஆரம்பித்துவிட்டது.

அம்மா தந்திருக்கும் செய்முறைகளின்படியே அதுபோலவே நான் சமைக்கிறேன். ஆனால் அதில் அந்த ருசி இல்லை. ஏனென்றால் அவள் வீடுபோல் என் வீடு இல்லை; அவள் கை மணமும் எனக்கு இல்லை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும்,  பெங்களூர் வீடு காலிசெய்யப்பட்டது. பெரிய பித்தளை அண்டாக்களை மாத்திரம்  போட்டுவிட்டு,  வீட்டில் இடம் இல்லை என்று முணுமுணுத்த மும்பாய்க் குழந்தைகளைப் பொருட்படுத்தாமல்  தன் பாத்திரங்களை எல்லாம் அம்மா கொண்டுவந்தாள். இரும்பு வாணலிகளையும் விட்டு வைக்கவில்லை. அவை ஒவ்வொன்றும் வாங்கிய ஆண்டும், விலையும் அவளுக்கு நினவில்  இருந்தன. என்னிடம் இப்போது இருக்கும் அடி கனமான வாணலி என் அக்கா சின்னப் பெண்ணாக இருந்தபோது எட்டணாவுக்கு வாங்கியது. தாளிப்புக்குப் பயன்படும் மெல்லிய பித்தளை வாணலி பெங்களூரில் ஒரு ரூபாய்க்கோ என்னவோ வாங்கியது. ஒரு முறை நான் என் தம்பியின்  வீட்டுக்குப் போனபோது செப்புக்குடமும், சேவை ஸ்டூலும், அப்பம் செய்யும் அப்பக்காரலும் யாருக்கும் உபயோகிக்க விருப்பமில்லை, துக்கிப்போட மனம் வரவில்லை, நான் என் வீட்டில் வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் தலைக்கு எண்ணெய் தேய்த்து என்னையும் என் அக்காவையும் அம்மா குளிப்பாட்டும்போது அந்த மர ஸ்டுலில் உட்கார்ந்துதான் குளிப்போம். என் வீட்டில் வைக்க ஒப்புக்கொண்டேன். செப்புக் குடத்தையும், ஸ்டூலையும் கொண்டுவந்ததோடு உலக்கையையும் எடுத்துக்கொண்டுவந்தாள். எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்து வந்தேன். நான் வீட்டினுள் நுழைந்ததும், என் கணவன் விஷ்ணு, உலக்கை எதற்கு என்று கேட்டான்.  “தற்காப்புக்கு” என்றேன் உடனே! அதோ, கதவின் பின்னால் செய்தித் தாளில் சுற்றப்பட்டு இருக்கிறது, யாராவது திருடன் வந்தாலோ என்னை யாராவது தாக்கினாலோ உபயோகிக்கத் தயாராக!  கொழுக்கட்டை செய்ய நான் முயற்சித்தேன். அது விபரீதமாகப் போய்விட்டது. அரிசிமாவுருண்டை  அச்சின் மேல் அழகான பாய்போல் விழவில்லை. பிறகு கையால் செய்தேன். அந்த அச்சு சுவர் மேல் அலங்காரப் பொருளாக இருக்கிறது. மர ஸ்டூலும் இருக்கிறது. ஒருமுறை ஒரு வெளிநாட்டுப் பெண்மணி  அந்தக் காலத்தில் குழந்தைகள் மலம் கழிக்க உபயோகித்த ஸ்டூலா அது என்று தயங்கியபடி கேட்டார்! செப்புக் குடம் என் சமையலறையின் கிழக்கைப் பார்த்த  சன்னலருகே வைத்திருக்கிறேன். கடல் உப்புக் காற்றால் அது பெங்களூரில் இருந்ததுபோல் பளபளப்பாக இல்லை. ஆனால் இருக்கிறது. பலமுறை நான் என் விரலை அதன் வாயில் பொறித்திருக்கும்  “அலமு”வின் மேல் ஓட்டியபடி நிற்பேன். அது மிகவும் மங்கிவிட்டது. ஆனால் “அலமு”வின்  “அ”  இன்னும் கையில் தட்டுப்படுகிறது. அது என் அம்மாவையும் அவள் உணவாலும், உணவின் சூழலாலும் அன்பாலும் நிறைத்த வீட்டையும் நினைவூட்டுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

oneating-border
Scroll to Top
  • The views expressed through this site are those of the individual authors writing in their individual capacities only and not those of the owners and/or editors of this website. All liability with respect to actions taken or not taken based on the contents of this site are hereby expressly disclaimed. The content on this posting is provided “as is”; no representations are made that the content is error-free.

    The visitor/reader/contributor of this website acknowledges and agrees that when he/she reads or posts content on this website or views content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance on the accuracy or completeness of that content. The visitor/contributor further acknowledges and agrees that the views expressed by them in their content do not necessarily reflect the views of oneating.in, and we do not support or endorse any user content. The visitor/contributor acknowledges that oneating.in has no obligation to pre-screen, monitor, review, or edit any content posted by the visitor/contributor and other users of this Site.

    No content/artwork/image used in this site may be reproduced in any form without obtaining explicit prior permission from the owners of oneating.in.