ஆட்டுச்செவி
Volume 4 | Issue 4 [August 2024]

ஆட்டுச்செவி<br>Volume 4 | Issue 4 [August 2024]

ஆட்டுச்செவி

அ.முத்துலிங்கம்

Volume 4 | Issue 4 [August 2024]

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் புத்தகங்களை தாறுமாறாக தரையில் எறிந்தேன். ஒருவருமே என்னை திரும்பி பார்க்கவில்லை. அம்மா குனிந்தபடி அரிவாளில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். என் அண்ணன்மாரைக் காணவில்லை. அக்கா சங்கீத நோட்டுப்  புத்தகத்தை திறந்து வைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என் சின்னத் தங்கச்சி வாய் துடைக்காமல் தள்ளாடி நடந்து வந்து தன்கையை என்வாய்க்குள் நுழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். நான் என் பிரகடனத்தை வெளியேவிட்டேன். ‘இன்று முதல் நான் மச்சம்,மாமிசம் சாப்பிடமாட்டேன். இனிமேல் என் உணவு மரக்கறிதான்.’ அப்பவும் அம்மா நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு வயது எட்டு.


Artwork – Rashmy, 2024

அன்று குடுமி வாத்தியார் வகுப்பில் பாடம் எடுத்தபோது சொன்ன கதை மனதில் பதிந்துவிட்டது. ஒன்றும் புரியாமல் அன்றும் திருக்குறளை பாடமாக்கி ஒப்புவித்தோம். ஒரு முறை எங்கள் வாத்தியார் கடலில் விழுந்துவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் ஆனால் உடம்பில் காயம்பட்டு ஒரு துளிரத்தம் சிந்திவிட்டது. சுறா மீன்கள் அவரை நோக்கி வரத்துடங்கின. சுறாக்களுக்கு ரத்தம் கால் மைல் தூரத்துக்கு மணக்குமாம். அவைக்கு நாலு வரிசைப் பற்கள். ஒரு பல் போய்விட்டால் இன்னொரு பல் அந்த இடத்தை நிரப்பிவிடுமாம்.  சுறாக்களின் செட்டைகள் குவிந்து கும்பிடுவதுபோல தோற்றமளிக்க, நாலுதரம் வாத்தியாரை சுற்றிவிட்டுஅவை போய்விட்டனவாம். ஏன் தெரியுமா? ’கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்ற குறள்தான்.

என் தம்பி அடாவடித்தனமானவன். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டான். அவன் கேட்டான், ‘சுறாக்களுக்கு வாத்தியார் மரக்கறிக்காரர் என்பது எப்படித் தெரியும். ஏன் நாலுவரிசைப் பல்லை வைத்துக்கொண்டு அவரை கடித்துக் குதறவில்லை.’ ‘மக்கு, மக்கு. ரத்தத் துளியை அவை மணந்துதான் வந்தன. அது மரக்கறி ரத்தத்துளி என்பது அவைக்கு தெரியாதா? நீ போ’ என்று தள்ளினேன். அவன் எரிச்சலோடு திரும்பும்போது ‘சுறாக்களுக்கு மணக்கவும் தெரியும். திருக்குறளும் தெரியும்’  என்றான்.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நான் உட்கார்ந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. எங்கள் குடும்பத்தில் நாங்கள் சகோதரங்கள் ஏழுபேர். எல்லோரும் நிரையாக அவரவர் தட்டுகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தட்டில் மீன்குழம்பு கமகமவென்று மணந்தது. தரையிலே கொஞ்சம் இடைவெளிவிட்டு சின்ன வாழை இலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் இடியப்பம், சம்பல், கத்தரிக்காய் குழம்பு என்று பரிமாறப்பட்டிருந்தது. நான் அம்மாவை பார்த்தேன். அவர் சாப்பிடு என்பதுபோல தலையை ஆட்டினார். அப்படித்தான் நான் மரக்கறிக்காரன் ஆனேன்.

அதன் பின்னர் அம்மா எனக்காக தனிச்சமையல் செய்ய ஆரம்பித்தார் .தனித்தனி சட்டிபானைகள்,  தனியாக வாழை இலை. அடுப்புக்கூட தனி அடுப்பு என்றால் நம்பமுடியாதுதான். அகப்பையை அக்கா கவனயீனமாக மாறிப் பாவித்துவிட்டால் அதைத்தூக்கி எறிந்துவிட்டு அம்மா புதுஅகப்பை வாங்குவார். வீட்டிலே என் மகத்துவம் திடீரென்று உயர்ந்தது. எல்லோரும் நிரையாக உட்கார்ந்து சாப்பிடும்போது எனக்கு நடக்கும் பிரத்தியேக கவனிப்பும், உபசரிப்பும் எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பிவிடும். ஒரு தடவை ஐயா, ‘ஒரு தடியெடுத்து முழங்காலுக்கு கீழே நாலு அடி கொடுக்காமல் செல்லம் கொடுக்கிறீர்’ என்றார். அம்மா, ’வாத்தியார் நல்லதுதானே செய்தார். உயிர் கொலை பாவம்தானே. அவனை தடுத்தால்அந்தப் பாவம் என்னைத்தானே வந்து சேரும்’ என்றார்.


Artwork – Rashmy, 2024

நான் மரக்கறிக்கு மாறியதில் என்மகிமை வரவர உயர்ந்து கொண்டே போனது. பக்கத்து வீட்டில் இருந்து யாராவது வந்தால் என் புகழ்பாடாமல் அம்மா அவர்களை திருப்பி அனுப்பமாட்டார். எதோ நான் பள்ளிக்கூடத்தில் முதல் பரிசு பெற்றதுபோல பாராட்டுவார். மரக்கறி சாப்பிட்டால் சுறாக்கள் கூட கும்பிடுமாம். அப்பிடி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இது வீட்டிலே பெரும் புயலைக்  கிளப்பியது. எல்லோருடைய எரிச்சலையும் செயலாக மாற்றியது என் தம்பிதான். எனக்கு முன்வந்து உடம்பை நெளித்தபடி ’ஓ, எங்களுக்கு இன்றைக்கு வாளைமீன் கறி. உனக்கு பாவம் வாழைக்காய் வெள்ளைக்கூட்டு’ என்று விட்டு வயிற்றைப் பிடித்துச் சிரிப்பான். அடுத்த நாள் ’எங்களுக்கு இன்றைக்கு றால் பொரியல். உனக்கு முசுட்டை இலை வறை. பாவம்’ என்பான். இன்னொரு நாள் எட்டத்தில் நின்று தன் பின்பக்கத்தை காட்டி நெளிப்பான்.  பின்னர் முன்னுக்கு வந்து நின்று நாலு பக்கமும் வளைவான்.  நான் பாய்ந்து கைகளைப் பிடித்து மிரட்டுவேன். விட்டதும் நாடாச்சுருள் போல தானாகச் சுழன்று                 உள்பக்கம்    ஓடிவிடுவான். ‘ஓ, பாவம் உனக்கு பூசணிக்காய். பினைந்து பினைந்து சாப்பிடு. எங்களுக்கு ஆட்டு இறைச்சி வறுவல்.’ எனக்கு தாங்க முடியவில்லை.  நான் சேர்த்து வைத்த புகழ் எல்லாம் இவனால் சேதம் அடைந்து கொண்டே போனது.

ஒருநாள் பின்னேரம் அம்மா அரிதட்டில் மாவை இட்டு இரண்டு கைகளையும் முழுக்க நீட்டி அரித்துக் கொண்டிருந்தார். அருமையான சமயம். இரண்டு கைகளும் வேலையில் இருப்பதால் அடிப்பதற்கு அவை    உதவப்  போவதில்லை. கெஞ்சுவது போல குரலை மாற்றி அம்மாவிடம் முறைப்பாடு வைத்தேன். அவையளுக்கு நல்ல நல்ல இறைச்சிக்கறி, சாப்பாடு, எனக்கு பூசணிக்காயா? தம்பி கூடச் சிரிக்கிறான். நான் பேசிக்கொண்டே போக அம்மா ஒன்றுமே சொல்லாமல் உடம்பிலே மா படாமல் அரித்துக்கொண்டே இருந்தார். எனக்கு அது துணிச்சலைக் கொடுத்தது.  அவர்களுக்கு இறைச்சி என்றால் எனக்கு உருளைக்கிழங்கு. அந்தக் காலத்தில் உருளைக் கிழங்கு சரியானவிலை. அதன் ருசிக்கு ஈடு இணை கிடையாது. மீன் என்றால் எனக்கு கத்தரிக்காய் குழம்பு. றால் பொரியல் என்றால் எனக்கு வாழைக்காய் பொரியல். நண்டுக்கு ஈடு முருங்கைக்காய். இப்படி நீண்ட பட்டியல் தயாரித்து சமையல் சுவற்றில் சோற்றுப் பசையால் ஒட்டி வைத்தேன். அம்மா அதைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை.

அதன் பிறகு பெரியமாற்றம் இல்லாவிட்டாலும் என் உணவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் என்மனம் சிலவேளைகளில் தடுமாற்றம் கண்டிருக்கிறது. ஒருநாள்                படலையை     திறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். நண்டுக் குழம்பு வாசனை மூக்கிற்குள் நுழைந்து வயிற்றுக்குள் போய்விட்டது. வாய் ஊறத் தொடங்கியது. நண்டுக்காலை அம்மா ஒவ்வொன்றாக உடைத்துத் தர நான் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. நான் அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தேன். அம்மா ‘ந ண்டுதானே. ஒரு சின்னக்காலை உடைத்து தாறேன், கொஞ்சம் சாப்பிடு’ என்று சொல்லியிருந்தால் என் வைராக்கியம் உடைந்து சிதறியிருக்கும். அம்மா என்னைக் கண்டதும் ஊர்ப் பெரியவரைக் கண்டது போல ச ட்டியை சட்டென்று மூடி மணம் என்பக்கம் வராமல்பார்த்துக் கொண்டார். பட்டியலில் நான் எழுதியபடி  பக்கத்து அடுப்பில் முருங்கைக்காய் வேகிக்கொண்டிருந்தது.

ஒருநாள் அம்மாவுக்கு பெரிய சவால் ஒன்று வந்தது. எங்கள் ஊரில் சாம்பல் கணவாய் அருமையாகத்தான் கிடைக்கும். அதன் ருசி தனியாக இருக்கும். கணவாய் சமைப்பதில் அம்மாவுக்கு ஒரு ரகஸ்யத் திறமை இருந்தது.  அம்மாவினுடைய சமையலை ஐயா பாராட்டினதே கிடையாது. ஆனால் கணவாய்    சமைத்தால் அந்தப் பாராட்டுக் கிடைக்கும். அன்று ஐயா எப்படியோ சிரமப்பட்டுத் தேடி வாங்கி வந்த சாம்பல் கணவாயை அம்மா தன் முழுத் திறமையை பாவித்து சமைத்தார். கணவாய் சமைக்கும்போது  இரண்டுபிடி முருங்கை இலை போட வேண்டும். அது ருசியை கூட்டும். அம்மா எங்கேயோ அலைந்து முருங்கை இலை சம்பாதித்து கணவாய் கறியை சமைத்து முடித்துவிட்டார். அது எழுப்பிய மணத்திலிருந்து உச்சமான ருசியை அது கொடுக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிட்டது. அம்மா ருசிபார்ப்பதே இல்லை. மணத்தை வைத்தே அவருக்கு தெரிந்துவிடும்.

கணவாய் கறி சமைக்கும் நாட்களில் அம்மா வேறு ஒருகறியும் வைப்பது கிடையாது. கணவாயும், வெள்ளை சோறும் மட்டுமே. அப்போழுதுதான் அதன் முழுச்சுவையையும் உள்வாங்கி அனுபவிக்கமுடியும். கணவாய் என்றால் அம்மா ஒரு சுண்டு அரிசி கூடப்போட்டு சமைத்திருப்பார். எல்லோரும் இரண்டு மடங்கு சாப்பிடும் நாள் அது. முழுச் சமையலையும் முடித்து ஓய்ந்தபோதுதான் அம்மாவுக்கு திடுக்கிட்டது. எனக்கு என்ன சமைப்பது என்று அவர்  தீர்மானிக்கவில்லை. சுவரிலே ஒட்டிவைத்த நீண்ட பட்டியலைப் பார்த்தார். அதிலே கணவாய் கிடையாது. அம்மாவுக்கு பதற்றம் தொற்றியது. என்ன சமைப்பது? நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.

அன்று மத்தியானம் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா எனக்கு தனியாக வாழை இலை போட்டு வெள்ளைச் சோறும் அதன்மேல் ஒருவித குழம்பும் ஊற்றியிருந்தார். எனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த என்தம்பி, விளிம்பு உடைந்த என்னுடைய பீங்கான் கோப்பையை தனதாக்கியவன், கணவாய் துண்டுகளை விரல்களால் தொட்டு ருசி பார்த்துக் கொண்டிருந்தான். ஏராளமான மக்கள் கூடியிருப்பதுபோல பெரும்கூச்சலுடன் கணவாய் கறியை சப்பிச்சப்பி  சாப்பிட்டனர். எனக்கு முன் இருப்பது என்ன என்று எனக்கு தெரியாது. பெயர் தெரியாத ஒன்றை நான் அதுவரை உண்டது கிடையாது. ஒரு வாய் அள்ளி வைத்தேன். என் எட்டுவயது வாழ்க்கையில் அதுபோல ஒன்றை நான் ருசித்தது கிடையாது. முன்னரும் இல்லை. பின்னரும் இல்லை. கணவாய்கறி போலவே சதுரம் சதுரமாக வெட்டியிருந்தது. மிருதுவாகவும் அதேசமயம் இழுபடும் தன்மையுடனும் இருந்தது. கடிக்கும்போது சவ்வுசவ்வாக ருசியை நீடித்தது. கணவாய் போலவே குணம், மணம் ருசி. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ருசி என்றென்றும் என்நாவில் தங்கிவிட்டது. அதன் பின்னர் அப்படியான ருசி என்வாழ்வில் மறுபடியும் கிடைக்கவே இல்லை.


Artwork – Rashmy, 2024

என்னுடைய ராச்சியம் இப்படி சிலவருடங்கள் ஓடியது. பின்னர் அம்மா இறந்துவிட்டார். பத்து வருடங்களுக்குப் பின்னர் அக்கா அந்த ரகஸ்யத்தை சொன்னார். சமையல் கட்டிலிருந்து அம்மா வெறிபிடித்தவர்போல வெளியே ஒடினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்கு என்ன சமைப்பது என்று அவரால் முடிவெடுக்க முடியவில்லை. அவர் என்ன சமைத்தாலும் அது கணவாய்க்கறியின் ருசிக்கு சமானமானதாக இருக்க வேண்டும். எங்கள் வளவில் 20 -25 தென்னைமரங்கள் நின்றன. அதிலே வெவ்வேறு மரங்களில் 12 இளம் காய்களை பறிப்பித்தார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக அவரே வெட்டித் திறந்து ஆராய்ந்தார். சிலதிலே வழுக்கை தண்ணீர்  போல படர்ந்திருந்தது. சில கட்டிபட்டு தேங்காயாக மாறியிருந்தன. இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஒரு தேங்காயை கண்டுபிடித்து அந்த வழுக்கையை பக்குவமாக தோண்டி எடுத்தார். அது தோல் போல மெத்தென்று இருந்தது. அதை ஐந்துதரம் தொட்டு அது ஆட்டுச் செவிப் பதம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். சதுரம் சதுரமாக வெட்டி ஒரு கணவாய்க்கறி சமைப்பதுபோல பக்குவமாகச் சமைத்தார்.

அன்று எல்லோரும் நிரையாக உட்கார்ந்த பிறகு எனக்கு பரிமாறினதுஅதுதான். முதலும் கடைசியுமாக அதை சாப்பிட்டேன். அதன்பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனென்றால் ஒருவருக்கும் அப்படி ஓர்உணவு இருப்பது தெரியாது. ஒரு பழஇலையான் போல பிறந்த அன்றே அது மறைந்துவிட்டது.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். ஒரு வார்த்தை பேசாமல் ஒரு தாய் தன் எட்டு வயது மகனை திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தார்.

உலகத்தில் பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறுமாதிரி இருப்பார்கள். தாய்மார் எல்லாம் ஒன்றுதான்.


Artwork – Rashmy, 2024

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

oneating-border
Scroll to Top
  • The views expressed through this site are those of the individual authors writing in their individual capacities only and not those of the owners and/or editors of this website. All liability with respect to actions taken or not taken based on the contents of this site are hereby expressly disclaimed. The content on this posting is provided “as is”; no representations are made that the content is error-free.

    The visitor/reader/contributor of this website acknowledges and agrees that when he/she reads or posts content on this website or views content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance on the accuracy or completeness of that content. The visitor/contributor further acknowledges and agrees that the views expressed by them in their content do not necessarily reflect the views of oneating.in, and we do not support or endorse any user content. The visitor/contributor acknowledges that oneating.in has no obligation to pre-screen, monitor, review, or edit any content posted by the visitor/contributor and other users of this Site.

    No content/artwork/image used in this site may be reproduced in any form without obtaining explicit prior permission from the owners of oneating.in.