உரை மற்றும் படங்கள் – கற்பகம் ராஜகோபால்.
Translated from English by Padmaja Narayanan
தென்னை மரங்கள் தான் முதலில் லேசான சமிக்ஞைகளைத் தரும், ஆனால் நீங்கள் அதை கவனமாக உணர வேண்டும். மூச்சை திணறடிக்கும் மெட்ராஸின் வெப்பமும், சோம்பேறித்தனமான கோடை மதியமும், காக்கைகள் கரைவதையும், காற்று அசைவதையும் கூட நிறுத்தி விடும். ஆனால் மூன்று அல்லது நான்கு மணி வாக்கில், தென்னை ஓலைகள் மெதுவாக சில வினாடிகளுக்கு, அசையத் தொடங்குவதை நீங்கள் உணரலாம். இதற்காகத்தான் அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள். கடல் காற்று வீசப் போகிறது என்பதற்கான அறிகுறி அது. மொத்த நகரமும் வானை நோக்கி அதன் வெப்பத்தை வெளியேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, கடல் காற்று ஒன்று மட்டும்தான் ஒரே ஆசுவாசம்.
60களின் பிற்பகுதியிலும் 70களின் ஆரம்பத்திலும் காணப்பட்ட மெட்ராஸ் இதுதான். மெரினா கடற்கரையின் தெற்கு முனையில் மகாத்மா காந்தி சிலையும் சுற்றி வந்தால் ஒரு நீரூற்றும், ஒரே ஒரு தாமரை மலர் காணப்பட்ட ஒரு ரவுண்டானாவும் இருந்த மெட்ராஸ். அது கடற்கரையின் எதிர்ப்புறம் சாம்பல் நிறத்தில் ஆல் இந்தியா ரேடியோ கட்டடம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும். காவலர்களின் தலைமையகம் எதிரே பரந்து விரிந்திருக்கும். கடற்கரையில் ஆங்காங்கே இலக்கியம் மற்றும் கலையில் சிறந்து விளங்கியவர்களின் சிலைகள் காணப்படும். அவை வடக்கு முனையில் உழைப்பாளர்கள் சிலையில் வந்து முடியும். சில வருடங்களுக்குப் பின்பு அரசியல் தலைவர் திரு அண்ணாதுரையின் சமாதியும் கலங்கரை விளக்கமும் வடபுரத்திலும் தென்முனையிலும் முறையாக அமைக்கப்பட்டன.
காலையில் எழுந்த உடனேயே சூரியன் பலமாக உங்கள் வயிற்றுக்கு மேல் அறைந்து சக்தி எல்லாவற்றையும் உறிந்து கொண்டது போல் இருக்கும். குளிப்பதற்கு முன்பும், பின்பும் வேர்ப்பது இயல்பாக இருந்தது. தூங்குவது என்பது முடியவே முடியாது. அல்லது வெறும் மொசைக் தரையில் படுத்து உறங்க வேண்டும். ஒவ்வொரு கோடையிலும் வட இந்தியாவில் இருந்து உறவினர்கள் விடுமுறைக்காக வருவார்கள். எங்கள் தாத்தாவின் வீடு, மாமி, அத்தை மற்றும் அவர்களது குழந்தைகளாலும் நிரம்பி இருக்கும். அடுப்பங்கரைக்கு ஓய்வென்பதே இருக்காது. எங்கள் தாத்தாவும் பாட்டியும் மிகவும் ஆச்சாரமானவர்கள். அவர்களுடைய ஆச்சாரம் குறுக்கே வந்தாலும், துருதுறுவென்று இருக்கும் குழந்தைகளாகிய எங்களை அருகில் இருக்கும் மெரினா கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த ஐந்து மணி என்பது தான்.எங்களுக்கு நாளின் மிக முக்கியமான நேரம். தினசரி வெப்பத்தின் சித்திரவதையிலிருந்து அது ஒரு பெரிய விடுதலையாக இருக்கும். பெரியவர்களுக்கும் அதே போல் தான் என்று நான் நினைப்பதுண்டு.
யார் எங்களை மேய்க்க வருகிறார் என்பதைப் பொறுத்தும், அது எந்த நாள் என்பதைப் பொறுத்தும்தான் நாங்கள் எந்தெந்த உணவு பண்டங்களை வாங்கி உண்ணலாம் என்பது முடிவு செய்யப்படும் . பின்னணியில் அலைகள் இசைத்தபடி கடல் கரை மணல் வாரி தெளித்த தின்பண்டங்களின் ருசி ஒரு படி மேலாக இருக்கும். எங்கள் பாட்டி எங்களை அழைத்துச் சென்றால் விதவிதமாக பொருட்களை ருசிக்கலாம். ஒவ்வொரு வியாபாரியின் உணவு பொருளையும் அவர் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வாங்கிக் கொடுப்பார்.
கடற்கரையில் சில வியாபாரிகள் இரண்டுக்கு நான்கு அடி உள்ள தள்ளு வண்டியில் உணவுப் பொருட்களை தயாரிப்பதுண்டு. கலங்கரை விளக்கத்திற்கு அருகே புன்னகையுடன் தின்பண்டங்களை விற்கும் பருத்த மனிதர் எங்களின் மிக விருப்பத்துக்குரியவர். அவரை நாங்கள் “குண்டன்” என்று பெயரிட்டு அழைத்தோம். மண்ணெண்ணெய் அடுப்பில் அவர் செய்து கொடுத்த உணவுப் பொருட்களை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த சிறிய இடத்தில் அத்தனையும் செய்வதற்கு எத்தனை திறமை வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அந்த தள்ளு வண்டியை மணலில் தள்ளிக் கொண்டு வருவதற்கு மிகுந்த பிரயத்தனப்பட வேண்டும், ஏனெனில் அந்த வியாபாரிகள் சாலையில் நின்று விற்பதற்கு அனுமதி கிடையாது
மெலிதாய் நீளமாய் நறுக்கப்பட்டு. பின் பல்பல்லாய் வெட்டப்பட்டு, உப்பும் மிளகாய் தூளும் தூவப்பட்டு, ஒரு கிழிந்த தாளில் தரப்படும் கிளி மூக்கு மாங்காய் உப்பு, இனிப்பு, காரம் ஆகிய மூன்று சுவைகளும் கொண்டு வெடுக்கென்று இருக்கும். சின்ன சின்ன பல்பல்லாய் வெட்டப்பட்ட அந்த துண்டுகளை வளைத்து, ஒவ்வொரு துண்டாக வாய்க்குள் போட்டுக் கொள்ளலாம். அதன் விலை கூட மிக அதிகமாக இருக்காது. எப்பொழுது வேண்டுமானாலும் அதை வாங்கித் தருமாறு கேட்கலாம். அதே போலத் தான் இரும்பு வாணலியில் வறுக்கப்படும் வேர்க்கடலையும் கூட. ஓட்டை உள்ள ஜாரணியால்,வறுக்கும் மண்ணிலிருந்து சலித்து எடுக்கப்பட்டு, நல்ல சுடச்சுட வறுக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு தாளில் சுற்றப்பட்டு தரப்படும்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உதவியாக சிறுவர்கள் நீள் சதுரமான உலோக பெட்டியை தூக்கிக்கொண்டு “தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்” என்று அலைவார்கள். சுண்டல் ஒரு அருமையான உணவு, அதில் அதிகம் கொழுப்பு இல்லை, புரோட்டீன் நிறைந்தது, அதே சமயம் இது ஒரு சிறந்த தின்பண்டமும் கூட. ஒரு தாளை பொட்டலமாக சுற்றி அதில் சுண்டலை தருவார்கள். பட்டாணி போன்ற தானிய வகைகள் ஊறவைக்கப்பட்டு வேகவைத்த பின், தேங்காய், கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம் மற்றும் சீவப்பட்ட மாங்காய் இவை தாளிக்கப்பட்டு கலந்து விற்கப்படும். எந்த சமயமானாலும், எங்கு வேண்டுமானாலும் சுண்டல் சுவை மிகுந்த உணவாகும். இதற்கு ஜோடியாக வருபவை தட்டையும் முறுக்கும். முறுக்கு அரிசியால் செய்யப்படும் வட்டமான ஒரு தின்பண்டம். தட்டை. கடலை மாவில் மற்ற மசாலா பொருட்கள் சேர்த்து கையால் தட்டப்பட்டு, பொறிக்கப்படும் ஒரு உணவு.
பாம்பேயில் எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் எங்களை அடிக்கடி சௌப்பாத்தி, கடற்கரையில் கிடைக்கும் தீனி வகைகளை ருசிப்பதற்கு அழைத்துச் செல்வார்கள். பாம்பேயின் ஏறிக்கொண்டே வரும் விலைவாசியைப் பார்க்கும் பொழுது மெட்ராஸ் கொஞ்சம் பரவாயில்லை. கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இடத்தில் அதே பணத்திற்கு அதிக பொருட்களை சிறிதும் கஷ்டப்படாமல் வாங்கிக் கொள்ளலாம். உணவு வகைகளை மிகவும் விரும்புபவர்கள், கடைசியில் இருக்குமொரு கடைக்குச் சென்றால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் பொரி, வேர்க்கடலை, உப்புக்கடலை போன்றவை அவர்களை வரவேற்றபடி இருக்கும் என்பதால், அதை சொல்லத் தேவையே இல்லை.
அதிகம் சாப்பிட்டு பழக்கம் இல்லாத பேல் பூரியும் பலவித சுவைகளுடன் ருசிக்கக் கிடைக்கும். கரகரப்பான பொரி, புதினா மற்றும் புளி சட்னி விட்டதால் சிறிது நமுத்தபடி இருக்கும். வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், கொத்தமல்லி தழைகள் தனி ருசியை தரக்கூடிய சிறிதாக நறுக்கப்பட்ட தக்காளி, மொறு மொறு ஓமப்பொடி, கரகர வென்று உடைக்கப்பட்ட சிறிய பூரிகள் ஆகியவை சேர்த்து கலக்கப்பட்டு தொன்னைகளில் தரப்படும். விரல்களால் லாவகமாக எடுத்து ருசித்த பின், சுற்றுச்சூழலுக்கு சிறிதும் பாதிப்பில்லாத இந்த தொன்னையை குப்பைத் தொட்டியில் போட்டு, விரல்களை நக்கியபடி, வாயில் தங்கிக் கொண்டிருக்கும் அந்த வாசனையில்,ருசியில் அமிழ்ந்து போகலாம்.
மற்றொரு தின்பண்டமான பானி பூரி உண்பதற்கு சிறிது கடினமாக இருந்தாலும், அதன் சுவை மிகவும் சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் அதை சாப்பிடுவது ஒரு சவால்தான். அதற்கு திறமையும், வேகமும், சாப்பிடும் அந்த கணத்தில் நாம் உறைந்து போகும் பக்குவமும் தேவைப்படும். நன்கு உப்பிய சிறிய பூரிகளின் மேல்பக்கம் மட்டும் சிறிது துளையிட்டு, அதற்குள் வெந்த உருளைக்கிழங்கும், முளையிட்ட பயிர்களும், புளி மற்றும் நல்ல காரமான மசாலா பொருட்கள் நிரம்பிய நீரும் நிரப்பப்பட்டு தந்தவுடன் உடனடியாக வாய்க்குள் தள்ளப்பட வேண்டும். ஒரே வாயில் இந்த அத்தனை ருசியும், வாசனையும் ஒன்று கலந்து ஒரு ருசியின் உச்சத்திற்கு நம்மை கொண்டு செல்லும். அதன் பின் மற்றொன்று, பின் மற்றொன்று. மனித மனத்திற்கு ஒன்றோடு நிறுத்தும் குணம் என்பது உண்டா என்ன?
சம்பிரதாயமாகத்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு “ஆலு டிக்கி” என்ற ஒரு பொருள் இருக்கும். வேகவைத்து பிசைந்து வட்டமாக தட்டப்பட்ட உருளைக்கிழங்கை சூடாக இருக்கும் தோசை கல்லில் வைத்திருப்பார்கள். தோசை கல்லின் நடுவில் ரகடா எனப்படும் சுண்டல் கொதித்துக் கொண்டிருக்கும். வேகவைத்த வெள்ளை பட்டாணியில் வெங்காயமும் மசாலாக்களும் சேர்த்து செய்யப்பட்டு தளதளவென்று இருக்கும் சுண்டல் அது. இரண்டு டிக்கிகளை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல் ஒரு கரண்டி ரகடாவை ஊற்றி, மேலும் அதன் மேல் இனிப்பும் புளிப்புமான புளி சட்னியும், பின் நன்கு நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் தூவி, அதை சாப்பிடுவது நம் மனதை அமைதிப்படுத்தும்,. புதிய உணவுகளை உண்டு பார்க்கும் சவாலை மேற்கொள்ளாதவர்களின் வயிற்றை அது இதமாக நிரப்பி விடும். மேலும், இது கண்ணுக்கு ஒரு விருந்தாகவும் இருக்கும். சூரியனைப் போன்ற மஞ்சளான உருளைக்கிழங்கு டிக்கியின் மேல், நல்ல பழுப்பு நிற புளிச் சட்னியை விட்டு, அதன் மேல் பச்சைவனத்தைப் பிரதிபலிக்கும் கொத்தமல்லியைத் தூவி,அதைக் காணும் போது கண்கள் பாக்கியம் கொள்ளும்.
மேற்கண்ட உணவுகள் தேவையான மாவுச்சத்தை தரவில்லை என்று யாராவது கருதினால், இருக்கவே இருக்கிறது பாவ் பாஜி என்ற தின்பண்டம். வெள்ளை நிற ரொட்டி இரண்டாக பிளக்கப்பட்டு, வெண்ணையில் நன்கு டோஸ்ட் செய்யப்படும். தோசைக்கல்லில் வேக வைக்கப்பட்ட காய்கறிகள் ஒரு புறம் குழைவாக இருக்கும். நாம் பாவ் பாஜியை கேட்டவுடன், இந்த காய்கறிகளை தோசைக்கல்லின் நடுவே மசாலாக்களுடன் சேர்த்து கலந்து, ரொட்டியுடன் தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இந்த காய்கறிகளுக்கு மேலே பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், கொத்தமல்லித் தழை, சிறிது எலுமிச்சைச் சாறும் சேர்க்கப்படும். இவ்வாறு உண்ணப்படும் திறந்த வகை சாண்ட்விச் போன்ற பாவ் பாஜி, ஒவ்வொரு வாய்க்கும் ஒருவித உணர்வைக் உண்டாக்கும். நல்ல வெண்ணையில் கொழுப்பும் மாவுச் சத்தும் கலந்த ரொட்டியும், அதனுடன் சத்து நிறைந்த காய்கறிகளும், அதன் மேல் தூவப்பட்ட மொறுமொறுப்பான வெங்காயமும், வாய்க்குள் இடும்போது புதுவித அனுபவத்தை தரும்.
இத்தகைய சாட் உணவுகளுடன் போட்டி போடக்கூடிய, நம் ருசி மொட்டுகளுக்கு சவால் தரக்கூடிய உணவுப் பொருட்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. அதில் ஒன்றுதான் மிளகாய் பஜ்ஜி. நல்ல நீண்ட பஜ்ஜி மிளகாயை மாவில் தோய்த்து எண்ணெயில் பொறிப்பது தான் மிளகாய் பஜ்ஜி. இந்த பஜ்ஜி மிளகாய் வருடத்தில் சில சமயங்களில் தான் கிடைக்கும். இது நம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மற்ற மிளகாய்களைப் போல காரமாக இருக்காது. இந்த மிளகாய் ஆறு அல்லது ஒன்பது இன்ச் நீளமாக இருக்கும். ஒரு படகைப் போல வடிவமைப்பைப் பெற்றிருக்கும் இவற்றை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்தால், ஒரு படகைப் போலவே மெதுவாக மேலும் கீழும் ஆடியபடி வேகும். பேப்பரில் வைத்துத் தரப்படும் இந்த பஜ்ஜியை சூடு ஆறுவதற்குள்,அதன் காம்பைப் பற்றியபடி ஒரு கடி கடித்தால், அதில் உள்ளிலிருந்து புறப்படும் வெப்பம் அதை உடனே தின்று தீர்த்து விடும்படி நம்மை சவாலுக்கு உள்ளாக்கும். இறுதியில், அந்த மிளகாயின் காம்பை மட்டும் நாம் இரு விரல்களில் பிடித்துக் கொண்டு, அந்த பஜ்ஜி கொடுத்த ஆனந்தத்தில் திளைத்தபடி நின்று கொண்டிருப்போம்.
சுடச்சுட ஆறு பஜ்ஜிகளை (போதும்) தின்று தீர்த்த பிறகு, தூரத்தில் சிறு நெருப்பு பொறிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அடுப்பு நம் கவனத்தை ஈர்க்கும்.அதை நோக்கிச் சென்றால், முழுமையான சோளக்கதிர்களை,அதன் பட்டைகளைப் பிரித்து பின்னால் தள்ளி,எரி நட்சத்திரம் போல் தோற்றமளிக்கும் அதை, குமுட்டி அடுப்பு போன்ற ஒன்றில் சுட்டுக் கொண்டிருப்பார்கள். சோளமுத்து ஆங்காங்கு மெதுவாக பொரியும். உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் இவை யாவும் கலந்த கலவை, இந்த சுட்ட சோளத்தின் மேல் தடவப்பட்டு நமக்குத் தரப்படும். முதல் கடியிலேயே அது எந்த அளவு தரமாக சுடப்பட்டு நம்மை சேர்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டு அதை தின்று தீர்த்து விடுவோம்.
இப்படியாக இரவு உணவை முடித்து விடுவோம். இதற்குப் பிறகும் ஏதாவது தின்பண்டத்தை வயிறு ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்தால், அருகிலேயே குவாலிட்டி ஐஸ்கிரீம் வண்டி காணப்படும். அதில் வனிலா, ஸ்ட்ராபெரி, ட்யூட்டிஃபுருட்டி ஐஸ்கிரீம்கள் விற்கப்படும். இவை ஒரு அட்டை கப்பில் போடப்பட்டு, மரக்கரண்டியுடன் தரப்படும். இவ்வகை ஐஸ்கிரீம் வேகவேகமாக ஐஸ்கிரீமை திங்க முடியாதவர்களுக்காகத்தான். அதை வேகமாக உண்ணக்கூடியவர்களுக்கு, குச்சியில் இருக்கக்கூடிய பலவித ருசியில் வரக்கூடிய ஐஸ்கிரீம்களும் விற்கப்படும். முக்கியமாக வனிலா ஐஸ்கிரீமின் மேல் சாக்லேட் மூடப்பட்ட சாக்கோபாரோ அல்லது பழங்களின் ருசியில் வரக்கூடிய குச்சி ஐஸ்களோ இருக்கும். இம்மாதிரியான குச்சி ஐஸை உண்ணும்போது, ஐஸ் நம்முடைய முழங்கையில் உருகி வழிவதை தவிர்க்கவே முடியாது. சில சமயம், இந்த குச்சி ஐஸ் மொத்தமாகவே மண்ணில் விழுந்து நமக்கு பெரிய தோல்வியைத் தந்துவிடும். உள்ளே ஐஸ்கிரீம் வைக்கப்பட்டு, முக்கியமாக ராஸ்பரி அல்லது மாம்பழ ருசியிலான குச்சி ஐஸ் கிரீம் வரும் வரை, இந்த கீழே விழும் அனுபவத்தை தவிர்க்க முடியாமல் இருந்தது. ஸ்ட்ராபெர்ரியை காணாத ஒரு சமூகத்திற்கு தான் இத்தகைய ருசியில் இந்த குச்சி ஐஸுகள் விற்கப்பட்டன என்பதையும் நாம் உணர வேண்டும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் யார் கவலைப்பட்டார்கள்? ஒரு நல்ல இரவு உணவின் முடிவாக இந்த ஐஸ்கிரீம்கள் கருதப்பட்டன அவ்வளவுதான்.
ஏதாவது ஒரு, காரணத்தினால் இந்த ஐஸ்கிரீம் வண்டிகள் கடற்கரையில் இல்லாமல் போனால், வீட்டிற்குச் சென்ற பிறகு எங்களுக்கு மூன்று வித வாய்ப்புகள் இருந்தன. அதில் இரண்டு தங்கள் வரவை மணி அடித்தபடியே எங்களுக்கு உணர்த்துபவை. அதில் ஒன்று புஹாரி ஐஸ்கிரீம் வண்டி. ஒரு சதுர பெட்டியில் ஐஸ்கிரீம் உருகாமல் இருப்பதற்கு காலையிலேயே வைக்கப்பட்டிருந்த ஐஸ் கட்டி மற்றும் உப்பின் கலவை, உருகி இருக்கும் நிலையில், எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அதில் மிதந்தபடி குல்பி நிரம்பிய அலுமினிய கூம்புகள் இருக்கலாம். பாலை நன்கு காய்ச்சி, அதில் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் உடைந்த பருப்புகள், முக்கியமாக பிஸ்தா ஆகியவற்ரை சேர்த்து உறைய விடுவது தான் குல்பி. குல்பிகாரர், அதை நேராகவும்,குறுக்கிலும் ஆறு துண்டுகளாக போட்டுக் கொடுப்பார். இதற்காக காத்துக் கொண்டிருக்கும் வயிற்றில், இவை இறங்கும் போது சொர்க்கமே வந்துவிட்டால் போல் தோன்றும். வரப்போகும் வெப்பமான இரவிற்கு அது ஒரு இனிய குளிரூட்டியாக ஆகிவிடும்.
‘ஐஸ்கிரீம் புகாரி’ என்று கத்திக் கொண்டே வரும் புகாரி ஐஸ்கிரீம் காரர் வரவில்லை என்றால் எதுவும் குறைந்து விடாது. அதேபோன்று மணி அடித்துக் கொண்டே இன்னொரு வண்டி வரும். அதில் ஒரு கண்ணாடி குடுவை காணப்படும். மிதந்து வரும் ஆவியைப் போல அந்த வண்டி தெருவில் வரும். அதுதான் சோன் பப்படி விற்பவரின் வண்டி. சோன்பப்படி ஈரானிய இனிப்பு வகையை ஒட்டி செய்யப்பட்ட ஒரு இனிப்புத் தின்பண்டம். மைதா சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் அதில், பாதாம் மற்றும் நெய் வாசனை வீசும். அதை விற்பவர் ஒர் இடுக்கியால் சிறிது எடுத்து சரியாக சுழற்றி, ஒரு பேப்பர் பொட்டலத்தில் அதை இட்டு நமக்குத் தருவார். சோன் பப்படியைத் தின்றுவிட்டு, அதன் துகள்களையும் விடாமல் நக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த பேப்பர் பொட்டலத்தை பிரித்து அதில் உள்ள துகள்களையும் உண்ணலாம்.
கடற்கரைக்கு போக முடியாத காலங்களில் வெயிலின் வெப்பத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள உதவுவது நுங்கு தான். மெத்து மெத்து என்று இருக்கும் அந்த நுங்கு நிச்சயமாக உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். அதே போல் இளநீரும் மற்றொரு குளிர்விப்பான். இளநீரை நன்கு குடித்த பிறகு, வியாபாரி அதை பிளந்து தேங்காயின் மட்டையிலிருந்து சிறு பகுதியை வெட்டி ஒரு கரண்டியைப் போல் தருவார். சிலருக்கு இளநீரில் தேங்காய் இளம் பதமாய் இருப்பது மிகப் பிடிக்கும், ஆனால் எங்களுக்கோ ஜெல்லியைப் போல கொழ கொழவென்று இருப்பதுதான் சொர்க்கம். வெப்பத்தை தணிக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய மற்றொரு பொருள் தர்பூசணி . எங்கள் தந்தை, ஒரு பழத்தின் மேல், ஒரு மத்து நுழையும் அளவிற்கு ஓட்டை இடுவார்; பின் மத்தை அதற்குள் விட்டு நன்கு கடையும்போது அது நல்ல சாறாக ஆகிவிடும். அதை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு சிறிது உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து, எங்களுக்கு உயரமான டம்ளர்களில் கொடுப்பார்.
கோடை காலத்தின் மற்றொரு கொடை மாங்காய். மதிய உணவுடன் நல்ல பழுத்த, நறுக்கப்பட்ட பங்கனபள்ளி மாம்பழம் யாவரும் எதிர்பார்த்து விரும்பும் ஒன்று. தென்பகுதிகளில் மல்கோவா, ருமானி, நீலம் இவை யாவும் நன்கு கிடைக்கும். சில சமயம் ருமானி புளிப்பாக இருந்து நம்மை ஏமாற்றிவிடும், ஆனால் பார்ப்பதற்கோ பளபளவென்று இருக்கும். சிறிய அளவில் காணப்படும் மல்கோவாவோ தேன் போன்ற ருசியில் இருக்கும், நீல மாம்பழமும் நம்ப முடியாத அளவிற்கு இனிப்பாக இருக்கும். வெளியே எந்த ஒரு மாசு மருவற்று இருந்தாலும் நீல மாம்பழத்திற்குள் நிச்சயமாக வண்டு காணப்படும்.
வீட்டில் உள்ள பெண்டிர்கள் உணவிற்குப் பிறகு மிகச் சிரமத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் ஓய்வெடுக்க ஆரம்பிக்கும் பொழுது, என்னிடம் கோடை காலத்திற்கே உரிய ஒரு முக்கியமான வேலை ஒன்றை ஒப்படைப்பார்கள்: கொல்லையில் காய்ந்து கொண்டிருக்கும் வடகமாகவோ, பறவைகள் வந்து கொத்திக் கொள்ளாமல் காப்பது தான் என் வேலை. இந்த வடகங்கள் அரிசி வடமாகவோ, ஜவ்வரிசி வடகமாகவோ இருக்கும். பிளாஸ்டிக் ஷீட் அல்லது வெள்ளை நிற துணியில் இடப்பட்டு காய்ந்து கொண்டிருக்கும். மாவு காலையிலேயே தயாரிக்கப்பட்டு, வடகமாக இடப்பட்டு, அவை நாள் முழுவதும் வெயிலில் காயும். இந்த வடகங்கள் காய்வதற்கு சில நாட்கள் ஆகும். ஈரம் முழுவதும் காய்ந்த பின், அவை பிளாஸ்டிக் அல்லது துணியில் இருந்து பிய்க்கப்பட்டு, நல்ல சம்படங்களில் பாதுகாக்கப்படும். ஆனால் இவை காயும் பொழுது, இவற்றை காக்கைகளில் இருந்தும், அணில்களில் இருந்தும், வேகாத, ருசியாக இருக்கும் எதையும் உண்ணும் சிறுவர்களிடமிருந்தும் காக்கப்பட வேண்டும். அந்த வேலைதான் எனக்கு.
இந்த வடகங்கள் சில எளிய பொருட்களைக் கொண்டே தயார் செய்யப்படுகின்றன. அரிசி மாவு அல்லது ஜவ்வரிசி மாவுடன் உப்பு, அரைக்கப்பட்ட பச்சை மிளகாய் சேர்க்கப்பட்டு, வாயில் ஒட்டாதபடி நல்ல நிறத்துடன் இருப்பதற்காக மோர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும். இந்த வடகங்கள் இடப்படும் போது தான் ஆச்சரியமான ஒன்று நிகழும்: வடகத்தின் ஓரங்களும் அடிப்பகுதியும் காய்ந்து விடும், ஆனால் நடுப்பகுதி காயாமல் ஈரத்துடன் கூழ் போல இருக்கும். இதை உண்ணும் போது இரண்டு வித இயல்பும் சேர்ந்து வாயில் கரையும் போது, ஒருவர் இந்த வடகங்களை இறுதிவரை காய வைத்து உண்ண வேண்டும் என்று ஏன் எண்ணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும். பாதி காய்ச்சலில் இருக்கும் வடகத்தின் ருசியை போல வேறு எதுவும் இருப்பதே இல்லை.
கொல்லைப் படிகளில், நல்ல உச்சி வெயிலில், நீண்ட ஒரு மூங்கில் கழியை கையில் வைத்துக்கொண்டு, காக்கைகளையும் அணில்களையும் விரட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். வெயிலால் கண்களில் பூச்சி பறக்கும். காய்ந்து கொண்டிருக்கும் வடகங்கள் வரிசை மாறாமல் பார்த்துக் கொள்வதும் என்னுடைய வேலை. அதற்கு ஈடாக வரிசையில் இருந்து தவறிச் சென்ற வடகங்களைத் தின்று கொள்ளலாம். அவ்வாறு வரிசையில் இருந்து தவறிச் செல்லாத வடகங்களையும் கூட சில சமயம் தின்று விடுவேன்.பிய்த்து தின்ற அறிகுறி காணப்படும் தான்.அதனாலென்ன?
இரவானதும் வெப்பம் மூச்சைத் திணறடிக்கும். தாங்க முடியாமல் இருக்கும் பொழுது பொடிநடையாக ‘காலாத்தி’ கடைக்கு சென்று விடுவோம். அது ஒரு சிறிய பெட்டிக்கடை, ஆனால் எந்த நேரமும் வாடிக்கையாளர்களின் கூட்டம் மொய்த்தபடி இருக்கும். இதற்கு காரணம் காலத்திக் கடையில் நல்ல குளிர்ந்த ரோஸ் மில்க் கிடைக்கும். ரோஸ் மில்க் என்பது குளிர்ந்த பாலில் ரோஜா எசன்ஸ், சர்க்கரை பாகு விட்டு தயாரிக்கப்படும் ஒரு குளிர்பானம். அதனுடைய கண்ணுக்கு இதமான இளஞ்சிவப்பு நிறமும், வாய்க்கு இதமான குளிர்ந்த பாலின் சுவையும், கோடைகால, வெப்பமான ஒரு நாளை மீட்பதற்கு நிச்சயம் உதவும்.
சிலருக்கு இந்த இனிப்பை எவ்விதமாவது சரி செய்ய வேண்டும் என்று தோன்றினால், கல்வீசும் தூரத்தில் இருக்கும், மத்தள நாராயணர் தெருவில் காணப்படும், கண்ணை மூடிக்கொண்டு கூட செல்லக்கூடிய ஒரு கடைக்கு செல்லலாம். ஏனெனில் அங்கு தயாரிக்கப்படும் வெங்காய பக்கோடா, நாம் கண்ணை மூடிக்கொண்டு சென்றாலும் அதன் மணத்தினால் சரியாக அதனிடத்தில் சேர்த்து விடும். பசியை உண்டாக்காத வெப்பத்தினால் தவிப்பவர்களுக்கு, இந்த வெங்காய பக்கோடாக்களின் மணம்,பசியைத் தூண்டிவிடும்.
சொல்லத் தேவையில்லை, இப்படி எல்லாம் உண்பதால் அதற்கு பின்விளைவுகள் நிச்சயமாக ஏற்பட்டுத்தான் ஆகும். நண்பர்களுக்கும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் வயிற்றில் பிரச்சனை ஏற்படும். அப்பொழுது அதற்கு ஒரே அருமருந்து மோர் தான். அதுதான் வயிற்றை குளிர்வித்து வயிற்று வலியைக் குறைக்கும். இந்த மோர், வடநாடுகளில் காணப்படும் நல்ல அடர்த்தியான, தயிரும், சர்க்கரையும், தயிர் ஆடையும் இட்ட லஸ்ஸி போன்றது அல்ல. இது வீட்டில் உறையூத்தபட்ட தயிரில் நிறைய தண்ணீர் சேர்த்து, உப்பும் பெருங்காயப் பொடியும் சேர்த்து தயாரிக்கப்பட்டது. இதையும் ருசியாக அருந்த விரும்புவர்கள் அதில் கருவேப்பிலையை கசக்கிப் போட்டு, சிறிது எலுமிச்சம் பழ சாற்றையும் சேர்த்து அருந்துவார்கள். மிகச் சாதாரண, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த இந்த நீர் மோர், கலங்கி இருக்கும் வயிற்றின் பாட்டை நன்கு குறைத்து விடும். சில சமயம் அதில் சிறிது வெந்தயமும் சேர்த்துக் கொள்வார்கள்.
இதற்கு அடுத்தபடி நல்ல தயிர் சாதம். குழைவாக சமைக்கப்பட்ட சாதத்தில் தயிர் விட்டு பிசையப்படுவதுதான் தயிர் சாதம். ருசியான, சத்தான, அமிர்தம் போன்ற இந்த தயிர் சாதத்தில் மேலும் நன்கு பொடியாக சீவப்பட்ட வெள்ளரிக்காய், கேரட், மாங்காய் மற்றும் உலர்ந்த திராட்சை இவற்றை சேர்த்து பிசைந்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்டி, நன்கு நறுக்கிய பச்சைக் கொத்தமல்லித் தழைகளையும் சேர்த்து பிசைந்து எடுத்தால் அது மேலும் அமிர்தம் போல் இருக்கும். ஒரு அடங்காத, சொல்பேச்சு கேட்காத, வயிற்று வலியால் அழுதுகொண்டே இருக்கும் ஒரு குழந்தை அடங்கி உறங்குவது போல, இந்த தயிர் சாதத்தை சாப்பிட்ட பிறகு, நம்முடைய வயிறும் சாந்தமாகும் என்பதை நாம் உணரலாம்.
இப்படியாக அதிகப்படியாக உண்ட நோயிற்கு ஒரு மருந்து எடுத்துக்கொண்ட நம்பிக்கையில், நாங்கள் அனைவரும் வெறும் தரையில் படுத்துக்கொள்வோம். அவ்வப்போது எங்களுடைய உள்ளங்கையை முகர்ந்து பார்ப்போம். மாலையில் நாங்கள் மிகவும் ருசித்து உண்ட கோடை காலத்திற்கே உரிய அருமையான தின்பண்டங்களின் மணம் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும். மெதுவாக நாங்கள் உறக்கத்தில் ஆழ்வோம்.
Hi Karpagam, THis was amazing. Took me to Marina beach for a while. And the description of the food in carts there….vera level og nostalgia. Keep the good work
What a delightful read, bringing alive the Marina Beach of the 1960s and 70s as did your descriptions of the delectable street food. The accompanying drawings were a visual treat.
Congratulations Karpagam.