Translated by Latha Arunachalam | லதா அருணாச்சலம்
எனது வயிற்றின் ஆரோக்கிய நிலை என்பது எப்போதும் எனது இதயத்தின் ஆரோக்கிய நிலையுடன் நேரடித் தொடர்பு கொண்டது.
இதற்கான அறிவியல் காரணங்கள் என்னிடம் உள்ளன- உடலின் மிக அதிகமான செரோட்டினின் குடல் நாளங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது அவற்றில் ஒன்றாகும். வயிற்றில் சமநிலை இல்லாத போது மனித மனதின் செயல்பாடுகளிலும் ஒரு பொருளை இதயம் உணர்வதிலும் சமநிலையின்மை ஏற்படுகின்றது. குடல் நாளங்களில் நன்மைக்கும் தீமைக்குமிடையே நிகழும் யுத்தம் நின்று விடும்போது உடலின் மற்ற பாகங்களும் பாதிப்படைகின்றன.
( வாழ்க்கை பற்றிய விசித்திரமான ஒரு கதை இதில் இருக்கலாம், ஆனால் அதை மற்றொரு நாளுக்கு வைத்துக் கொள்ளலாம்)
ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன்னால் குடல் எரிச்சல் நோயின் அறிகுறிகள் எனக்கு இருக்கிறதென்று மருத்துவ ரீதியாக ஆய்ந்து கண்டறியப்பட்டது. நீண்ட காலமாக இது குறித்து எனக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால் நான் வாழ்க்கையில் நோயுடன் போராடிக் களைப்படைந்திருந்த காரணத்தால் மருத்துவமனையின் மீது தீராத வெறுப்பு தோன்றி விட்டது.அதனால் வாய்வுப் பிரச்சனையும்,வறட்டுக் குமட்டலின் அறிகுறிகளும் கடுமையாகி மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை இயன்ற அளவு ̀மருத்துவரிடம் செல்வதைத் தள்ளிப் போடும் கோழைகளின் பாதையையே தேர்ந்தெடுத்தேன்.
என்னுடைய மருத்துவர் தனது ஆலோசனையை முடித்த பின் “உன்னால் மட்டுமே உனது நோயைக் குணப்படுத்த முடியும், இந்த நோய்க் குறியீடுகளைக் குணப்படுத்த என்னால் மாத்திரைகளைத் தர முடியும். ஆனால் உன் மிகப் பெரிய பிரச்சினையே உனக்குள் இருக்கும் மன அழுத்தம் உன்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதுதான்” என்று வெளிப்படையாகக் கூறி விட்டார்.
“உன்னைச் சரிப்படுத்திக் கொள்” எனது மருத்துவர் சொல்கிறார். “உன்னைச் சரிப்படுத்திக் கொள்” எனது வயிறும் சொல்கிறது.
“உன்னைச் சரிப்படுத்திக் கொள்”
நான் எப்போதும் மனநிறைவுடன் உணவருந்துவேன்
அப்போது நான் எனது வீட்டை விட்டுப் பிரிந்து வேறிடத்தில் தனியாகத் தங்கியிருந்தேன். “எப்போதும் சமையலே பிரதானம்” என்பது போன்ற குடும்பத்திலிருந்து வந்தவளல்ல நான்-அம்மா ஒரு முழு நேரப் பணியில் இருந்ததால், என்னை வளர்ப்பதற்கும் வீட்டைக் கவனிப்பதற்குமிடையே சமையல் கற்றுக் கொள்வதற்கெல்லாம் அவருக்கு ஆர்வமோ நேரமோ இல்லை.என் அப்பா, எத்தனை நற்குணங்கள் கொண்டிருந்தாலும், ஆண்கள் வீட்டில் சமையல் கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று எண்ணும் குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர்.
அதனால் தனியாகவும் தொலைவிலும் இருந்த நான் முதல் முறையாக சமையலறையில் தானாகவே எதையோ செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த வேளை அது. அந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய முதல் காதலனைச் சந்தித்தேன். சமையலை நேசிக்கும் அவனுடன் அது சார்ந்த அனைத்து அனுகூலங்களும் என்னை வந்தடைந்தன.
அவன் எனக்களித்த சின்னச் சின்னப் பாடங்களுக்காக நான் எப்போதும் நன்றியுடையவளாக இருப்பேன். நாங்கள் இணைந்திருந்த காலத்தின் ஆகச் சிறந்த நினைவுகள் ஆயிரக்கணக்கான நறுமணங்களுடனும் சப்தங்களுடனும் வண்ணங்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தன – சீரகத்தையும் மிளகாய்ப் பொடியையும் கலக்கிய கலவை, நான் ஒருபோதும் கேள்விப்பட்டிராத உணவுப் பொருட்களின் கலவையான நாவை உறைய வைக்கும் காரமுடைய ஸ்காட்ச் பானட் மிளகாய், இனிப்பு பூசிய வெங்காயத்துக்காகப் பயன்படுத்தும் வெல்லம், இன்றும் கூட என் வாயில் நுழையாத பெயர் கொண்ட வடகிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய பதார்த்தங்களில் ஒன்றான பன்றிக்கறியில் சமையல் சோடாவைச் சேர்த்துச் செய்யும் வறுவல் போன்றவை.
என்னுடைய முதல் காதலை நினைக்குந்தோறும் தேசங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் ஊடாக நுழைந்து நாங்கள் கண்டுபிடித்த உணவுகளும் அந்த உணவுகளுடனான எனது உறவு எவ்வளவு கனிந்தும் எவ்வளவு மகத்தானதாகவும் இருந்ததென்பதும் ஞாபகத்தில் மோதும். வேறெவரையுமே காணாத வகையில் ஒருவரைப் பார்க்கும் போதும் அதைப் போன்றே அவரால் நாம் பார்க்கப்படும் போதும் அடையும் பரவசமும் பரபரப்பும் தரும் இன்பத்தைப் போலவே அதுவும் அழகாக இருந்தது.
அது எனது வாழ்வின் ஒரு சிறிய வண்ணமயமான சூர்யோதயம்: உணவு, சமையல் மற்றும் காதலும் காதலிக்கப்படுவதும்.
அந்தக் காதல் முறிந்த போது இயல்பாகவே அந்த உணவு சார்ந்த எனது மகிழ்ச்சியும் மறைந்து போனது. நான் சமைப்பதை நிறுத்தினேன், அதற்கும் மேலாக, நான் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன்.
எனது இதயம் சிறுபிள்ளைத்தனமான, முட்டாள்தனமான வழிகளில் அதன் அர்த்தத்தை இழந்தது, அதைத் தொடர்ந்து என் உடலும்தான்.
உண்ணப்படாத ஒவ்வொரு உணவுடன் நானும் மெல்லத் தேய்ந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்.
குழந்தையாக இருக்கும் போது உணவு உண்ணும் விஷயத்தில் நான் எவ்வளவு அடம்பிடிப்பேன் என்பதுதான் என் அம்மா அடிக்கடி என்னைப் பற்றிக் கூறும் புகார்.
சிறுவயதில் நான் மிகவும் நோஞ்சானாகவும் என்ன சாப்பிடுவது என்பதில் மிகவும் தேர்வுடையவளாகவும் இருந்தேன்.என்னுடைய வளரும் பிராயத்தில் கொடுவா மீன், உருளைக்கிழங்கு, சாம்பாரில் மிதக்கும் தக்காளி, அவ்வப்போது முட்டை மற்றும் பால் போன்றவற்றை மட்டுமே உண்டு வளர்ந்தேன் என்று அம்மா சத்தியமே செய்வார். பால்யத்தில் என்னுடைய ஆதர்சமாக இருந்த பாட்டிதான் எனக்கு ஊட்டி விட வேண்டுமென்று அடம் பிடிப்பேன்.அவர், கை தொட்டு ஊட்டி விட்டாலே அந்த உணவுக்குத் தனிச்சுவை வந்து விடும்.
வீட்டில் பாட்டி தரும் மதிய உணவு என்னுடைய பொக்கிஷமான நினைவுகளில் ஒன்றாகும்.நான் அவருடைய காலடியில் அமைதியாக அமர்ந்திருக்க, மிகக் கவனமாக சாம்பாரையும் அரிசிச் சாப்பாட்டையும் ஒன்றாகப் பிசைந்து, உருளைக்கிழங்கை தக்காளியுடன் அப்படியே மசித்துத் தருவார். எனக்கு எப்படிப் பிடிக்குமோ அதே போலப் பொறித்து வைத்திருக்கும் மீனிலிருந்து நல்ல இளம் மீனைக் கவனமாக எடுத்துத் தருவார். எனது சின்னஞ்சிறு வாய்க்குத் தகுந்தவாறு சாப்பாட்டை சிறிய மெல்லிய உருண்டைகளாக உருட்டித் தருவார்.
பாட்டி எனக்கு ஊட்டி விட்ட நாட்களில்தான் நான் ஒரு பருக்கையைக் கூட விடாமல் நன்றாகச் சாப்பிட்டேன். அப்போது என்னுடைய குட்டி வயிறும் அதை விட எனது மனமும் நிறைந்திருக்கும். உணவருந்திய பின் உடனே உறங்கினால் சரியாக செரிமானம் ஆகாது என்று கூறி ( அந்த தேவதை சொல்வது எப்போதும் சரியானது) உடனே உறங்க அனுமதிக்க மாட்டார்.சற்று நேரம் கழித்து தன்னுடைய அழகான கைகளால் என்னை மெல்லத் தட்டிக் கொடுத்து உறங்க வைப்பார்.
இப்போதும், இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் , எனக்கென்று ஒரு சிறிய குடும்பம் உருவாகிய பின்னும் அது போன்ற சுகத்திற்கு நான் ஏங்குகையில் என் மனம் சாம்பார் சாதத்தையும் மீன் வறுவலையுமே நாடும்.என்னுடைய உணவு மேசையில் அமர்ந்து , பால்ய உணவின் ஒவ்வொரு கவளத்தையும் உண்ணுகையில் என் மனம் சற்றே ஆறுதல் கொள்ளும்.
இப்படித்தான் என் மனதில் நிறைந்திருந்த இருட்டிலிருந்து என் வயிறு என்னை வெளிச்சத்திற்கு அழைத்து வந்தது.
என் மகளிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயங்களைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
( உண்மை என்னவென்றால் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எனக்கு மகளுமில்லை, ,இனி வரும் காலத்திலும் எனக்கு மகள் இருப்பாளா என்பதும் நிச்சயமில்லை என்பதையும் உங்கள் தகவலுக்காகப் பகிர்கிறேன்.)
அதனால், என் மகள் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அவள் என் குடும்பத்தைப் பற்றியும், அவள் தந்தையின் குடும்பம் குறித்துமான கதைகள் அவளுக்குக் கிடைக்கும்.அவள் விருப்பப்பட்டால் இவற்றை எடுத்து ஆய்வு செய்து கொள்ளலாம்.
ஆனால் இவை மட்டும் போதுமானவையாக இல்லை.
அவளுக்கு படைப்பூக்கத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும் ஏதோவொன்று, அவளுடனேயே வளர்ந்து முதிர்ச்சி பெறும் ஏதோவொன்று , வீட்டின் அரவணைப்பு வேண்டி அவள் ஏங்கும் பொழுது அவளுக்கு மகிழ்ச்சியையும் இதத்தையும் தரும் ஏதோவொன்று என்னிடம் இருக்க வேண்டும்.
என் குடும்பத்தின் சமையல் குறிப்புகளை அவளுக்காக விட்டுச் செல்ல வேண்டும், என் குடும்பத்தினர் சமைக்கும் நான் உண்டு வளர்ந்த உணவுகளின் சமையல் குறிப்புகள். அது போலவே, பெரும்பாலான நாட்கள் நான் பொறாமை கொள்ளும் அளவுக்கு சமையலுடனும் உணவுடனும் அதி உற்சாகமான வலுவான, வளமான தொடர்பு கொண்ட என் கணவரின் குடும்பத்தினரிடமிருந்தும் அவளுக்குக் கிடைக்க வேண்டும்.
நாம் உண்ணும், சமைக்கும் உணவிலிருந்து கிடைக்கும் பாரம்பர்யம், , நம் குடும்பங்கள் காலங்காலமாக நமக்குக் கடத்திய உணவுக் கலாச்சாரம், நானும் என் கணவரும் இணைந்து உருவாக்கிய பாரம்பர்யம் யாவற்றையும் அவளுக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
நானும் அவள் தந்தையும் மகிழ்வுடன் அனுவவிக்கும் சிறிய எளிய விஷயங்கள்- ,எப்போதாவது முழுமையான உணவை மனமார உண்ண விரும்புகையில் அரிசி உணவு மற்றும் டோஃபு ஜிக்கேவுடனும் சேர்த்த கொரியன் வறுத்த கோழிக்கறி; மதிய உணவுக்கோ இரவுணவுக்கோ தோசையுடன்( ஒரு முட்டையை அதன் மீது உடைத்து ஊற்றினால் மிகவும் நன்று) காய்கறிகளும் தொக்கும் துணையாக வைத்து உண்ணுவது எனக்குப் பிடிக்கும், ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்த, விசித்திரமான வகையில் சாத்வீக உணவை மட்டுமே விரும்பும் என் கணவர் காலை உணவுக்கு சாம்பாருடனும் சட்னியுடனும் சேர்த்து தோசையை மட்டும், (அதுவும் கொஞ்சம் நெய்யுடன் முறுகலாக) )உண்பார்.மற்றும் விருந்தினர்கள் வந்தால் மட்டுமே அவர்களுக்குத் தங்கள் சமையல் திறனைக் காட்டுவதற்காக வெளிவரும் என் மாமியாரின் பிரியாணி சமையல் குறிப்புகள் அல்லது நிறைய இஞ்சி, பூண்டு , கொத்துமல்லி சேர்த்து அவித்து ,கொஞ்சம் சோயா சாஸில் ஊறவைத்த மீனும், அதனுடன் ஜாஸ்மின் அரிசிச் சாப்பாடு, வறுத்த போக் சாய், எங்கள் வீட்டின் பிரதான மதிய உணவாக இருக்கும்.
ஒவ்வொரு உணவும் அன்பாலும் நினைவுகளாலும் பிணைந்திருக்கின்றன. இவை யாவற்றையும் நான் எழுத்தில் வடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் ஒரு நாள் என் மகள், இந்த விசித்திரமான, அலுப்பூட்டும் உலகில் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கையில் தனிமையில் எங்கோ வழிதவறிப் போனால் அவளுடைய வயிறும் இதயமும் சரியான பாதையை வந்தடைவதற்காகப் பேரன்பினால் குழைத்து எழுதப்பட்ட இந்தச் சிறிய வரைபடத்தைக் கையில் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டிலிருந்து ஒரு வாரமாக வெளியே தங்கியிருக்கிறேன்.
வீட்டிற்குச் சென்றதும் எனது உணவு மேசையில் கொஞ்சம் சாம்பார்,அதனோடு கொஞ்சம் மீன் மற்றும் என்னைச் சுற்றிலும் அலையலையாக எதிரொலிக்கும் என் பாட்டியின் அன்புடனும் நான் உண்ணப் போகும் முதல் உணவைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
காத்துக் கொண்டிருக்கிறேன்.